சென்னை:
காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து இன்று பலரும் சென்னை திரும்ப உள்ளனர். பல நாட்களாக ஊருக்கு சென்றவர்கள், ஒரே நாளில் சென்னை வர உள்ளதால், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.இது குறித்து புகார்கள் எழுந்துள்ளதையடுத்து, கட்டணக் கொள்ளை குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை, போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, போக்குவரத்துத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தொடர் வார விடுமுறையால், இந்த மாதம் 21ம்தேதி வரை பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் கடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போக்குவரத்துதுறை அமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த குழுக்கள் தீவிர ஆய்வு செய்து விதிகளை மீறிய பஸ்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
மேலும், பயணிகள் கூடுதல் கட்டணம் குறித்து 93848-08333 அல்லது 1800 425 6151 என்ற எண்களை தொடர்புக் கொண்டு புகார் தெரிவிக்கலாம். இத்துடன் [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் புகார் அனுப்பலாம்.