கோவை:
அமோக விளைச்சல் காரணமாக மேட்டுப்பாளையம் சந்தையில் ஊட்டி கேரட் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையத்தில் மலை காய்கறிகள் ஏல சந்தை உள்ளது. இச்சந்தைக்கு நீலகிரியில் விளையும் கேரட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல், டர்னீப், மேரக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் ரக கேரட் விதைகளையே பெரும்பாலான விவசாயிகள் பயிரிடுகின்றனர். தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் அறுவடை செய்த கேரட்டுகளை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். வழக்கமாக தினசரி 50-60 லோடுகள் வரை லாரிகளில் கேரட் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது விளைச்சல் அதிகரிப்பால் 115 லாரி லோடுகள் வரை வரத்து உள்ளது.
மேலும் வெயிலின் தாக்கத்தால் கேரட் நிறம் மற்றும் தரம் குறைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஒரு கிலோ ரூ.40-60 வரை விற்பனையாகி வந்த கேரட் தற்போது கிலோ ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. இந்த விலை சரிவு நீலகிரி மலை மாவட்ட விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது.
இது குறித்து ஊட்டி கேரட் விவசாயி ஒருவர் கூறுகையில், ‘‘ அமோக விளைச்சலால் விலை வீழ்ச்சியடைந்தது வரும் நிலையில், முதல் ரக கேரட்டுகளை மட்டும் தரம் பிரித்து வெளியூர்களுக்கு அனுப்புகிறோம். சுமார் ரக கேரட்டுகளுக்கு மிகமிக குறைந்த விலை கிடைக்கிறது. இந்நிலை இம்மாதம் இறுதி வரை நீடிக்கலாம்‘ என்றார்.