மோட்டார் வாகன விபத்து இழப்பீடு மற்றும் தொழிலாளர் நல வழக்குகளில், கோரப்படாமல் உள்ள தொகைகளை கண்காணிக்கவும், அறிந்து கொள்ளவும், இணையதளத்தில் பிரத்யேக வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை தேசிய தகவல் மையத்தின் ஒருங்கிணைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதியை அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளும், மோட்டார் வாகன சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தாக்கலாகும் வழக்குகளின் விபரங்களை, டிஜிட்டல் டாஷ்போர்டில் தவறாமல் பதிவேற்றம் செய்து, புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறை வழிகாட்டுதலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய வசதியில், தொழிலாளர் நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருவது தொடர்பாக, நீதிமன்றங்களில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் தேங்கிக் கிடக்கும் இழப்பீட்டு தொகைகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். மேலும், உரிய பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைவாகச் சென்று சேர்ப்பதையும், இது எளிதாக்கும்.
அதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், டெபாசிட் செய்யப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகைகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கவும் உதவும்.
http://hcmadras.tn.gov.in/mact என்ற இணையதள முகவரியில், இத்தகைய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.