சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனையில் உலக விபத்து காய தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வரவேற்புரையாற்றிய மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ், "மருத்துவர் நோயைக் குணப்படுத்த அறிவைப் பயன்படுத்தலாம். ஆனால், மனிதநேயமும் கனிவும் கொண்ட இதயத்தைப் பயன்படுத்தாமல் நோயாளியை முழுமையாக மீட்க முடியாது" என்றார்.சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் பேசுகையில், "விபத்துகளைத் தடுப்பது தனி மனிதனின் பாதுகாப்பு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் நல்வாழ்வோடு தொடர்புடையது. விபத்து நடந்தவுடன் பலரும் சட்டச் சிக்கல்களுக்கும் காவல் துறை விசாரணைக்கும் பயந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். மனிதாபிமானத்துடன் உடனடியாக உதவிக்கரம் நீட்டுவதே ஒரு சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடையாளம்.
முறையான தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதைத் தவிர்ப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பது போன்ற அடிப்படை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிகளை மதிப்போம். விபத்தில் காயமடைந்தோருக்குப் பாதுகாப்பாக உடனடியாக உதவுவோம். மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம் என்ற உறுதிமொழியை அனைவரும் அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.