கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு மற்றும் தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து மாறுபட்டு வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 4,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.780 அடியாகவும், நீர் இருப்பு 20,955 மில்லியன் கன அடியாகவும் பதிவானது. இந்நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.750 அடியாகவும், நீர் இருப்பு 20,935 மில்லியன் கன அடியாகவும் குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 2,702 கன அடியாக இருந்த நீர்வரத்து, மாலை நிலவரப்படி 2,412 கன அடியாக சரிந்துள்ளது. அதே சமயம், காவிரி ஆற்றில் தொடர்ந்து விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய்ப் பகுதிக்கு நீர் திறப்பு எதுவும் இல்லை. இதனிடையே, இப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 9.6 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.