திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த தம்பதியிடம் இருந்து ரூ.2.26 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு (ஏ.ஐ.யு.) சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் வந்த தம்பதியினரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள், இருவரிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அணிந்திருந்த உள்ளாடைகளிலும், கைப்பையிலும் மறைத்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களிடமிருந்து மொத்தம் 1.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2.26 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தங்கத்தைக் கடத்தியதாக கூறப்படும் தம்பதியினரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.