மேற்கு ஆசியாவில் அதிகரித்த பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, பலவீனமான சர்வதேச சந்தை நிலவரம் ஆகியவற்றின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிந்தன. சென்செக்ஸ் 460.30 புள்ளிகளையும், நிஃப்டி 123.70 புள்ளிகளையும் இழந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 0.62 சதவீதம் குறைந்து 73,249.39 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 704.58 புள்ளிகள் சரிந்து 73,005.11 புள்ளிகளைத் தொட்டது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 0.54 சதவீதம் வீழ்ச்சியடைந்து 22,687.65 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேரத்தில் 256.50 புள்ளிகள் குறைந்து 22,554.85 புள்ளிகள் வரை சென்றது.
அன்றாட நுகர்பொருள்கள், மின்சாரம், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளில் விற்பனை அழுத்தம் அதிகரித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எட்டர்னல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பவர்கிரிட், டிரென்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிசிஎஸ், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை சரிவைச் சந்தித்தன.
பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை ஏற்றம் கண்டன.
மேற்கு ஆசியப் பதற்றத்தால் எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்கக் கவலை அதிகரித்ததாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவும் முதலீட்டாளர் மனநிலையைப் பாதித்ததாக கூறினார்.
வங்கிப் பங்குகள் உதவியுடன் சந்தை மீள முயன்றபோதிலும், உயர்ந்த நிலைகளில் நீடிக்கவில்லை. உள்நாட்டுக் கடன்பத்திர வருவாய் அதிகரித்ததால் பெரும்பாலான துறைகளிலும் விற்பனை பரவியது. நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டன.
ஆசியாவில் தென்கொரியாவின் கோஸ்பி 3.52 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங்செங் 3.03 சதவீதமும், ஜப்பானின் நிக்கேய் 2.40 சதவீதமும், ஷாங்காய் குறியீடு 1.48 சதவீதமும் சரிந்தன. ஐரோப்பியச் சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகின.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 112 அமெரிக்க டாலரைக் கடந்தது.
புதன்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,022.32 கோடிக்கும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,614.32 கோடிக்கும் பங்குகளை வாங்கியதாகப் பரிவர்த்தனைத் தரவுகள் தெரிவித்தன.
முந்தைய நாளான புதன்கிழமை சென்செக்ஸ் 143.21 புள்ளிகள் குறைந்து 73,709.69 புள்ளிகளிலும், நிஃப்டி 77.60 புள்ளிகள் சரிந்து 22,811.35 புள்ளிகளிலும் முடிவடைந்திருந்தன. அமெரிக்கச் சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தபோதிலும், ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளின் பலவீனம் வியாழக்கிழமை இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது. ஜப்பானின் பணவீக்கத் தரவுகள் வெளியாகவுள்ள சூழலும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்ததாக நாயர் மேலும் குறிப்பிட்டார்.