சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கரிமூட்டத் தொழிலுக்கான மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்களில் டீ தயாரிக்க பயன்படுத்தும் பாய்லர் முதல் பல்வேறு தொழிலகங்களில் வடிகட்டியாக விறகு கரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மரத்துண்டுகளை வெட்டி தீ மூட்டம் வைத்து 17 நாட்கள் வேக வைத்து பக்குவமாக எடுத்தப் பிறகே இந்த கரிகள் கிடைக்கின்றன. இதற்கான உழைப்பையையும், செலவையும் கணக்கில் கொண்டால் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பதே இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் கருத்தாகும். ஏற்கெனவே இந்த தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், தற்போது கரி தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருளான சீமைக்கருவேல மரத்தை வெட்டி அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கரிமூட்டம் தொழிலை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளதாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மறவனூரைச் சேர்ந்த முத்து தெரிவித்துள்ளார்.அதிகரிக்கும் உற்பத்தி செலவு
அவர் மேலும் கூறியதாவது: ஒரு கரிமூட்டம் அமைப்பதற்கு சுமார் 50 டன் விறகுகள் தேவைப்படுகின்றன. டன் ரூ.1,500-க்கு வாங்கப்படுவதுடன், அதை கொண்டு வருவதற்கான வண்டி வாடகை, வெட்டி அடுக்குவதற்கான செலவு, தொடர்ந்து 17 நாட்கள் வரையில் கண்காணிக்கும் பணியில் ஆட்களை நியமிப்பது என பல்வேறு செலவுகள் உள்ளன. கரிமூட்டம் அமைக்கும் பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு நாள் கூலியாக ரூ.650 வழங்கப்படுகிறது. எதிர்பாராத வகையில் ஒரு கரிமூட்டம் சரியாக அமையாமல் முழுவதுமாக எரிந்து போனாலோ அல்லது பாதியளவே வெந்திருந்தாலோ பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதையெல்லாம் தாண்டித்தான், தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
நீதிமன்ற உத்தரவால் சீமைக்கருவேல மரங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டால், இதர வகை மரங்களைப் பயன்படுத்தி கரி தயாரிக்க வேண்டியிருக்கும். ஆனால், சீமைக்கருவேல மரத்தைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் அளவுக்கு மற்ற வகை மரங்களில் கரி கிடைக்காது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்து, தொழிலில் நஷ்டம் அதிகரிக்கும்.
விறகுகளை வாங்கி வந்து, தேவையான அளவுக்கு வெட்டி, முறையாக அடுக்கும் பணி மட்டும் 5 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 20 அடி உயரம் வரை விறகுகளை அடுக்கி தீமூட்டி, 17 நாட்கள் தொடர்ந்து வேகவைக்கப்படுவதால் மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே கரிமூட்டம் அமைக்கப்படும். மூட்டத்தைக் குளிர்வித்து, தண்ணீர் ஊற்றி, கரியைப் பிரிக்கும்போது
200 முதல் 350 மூட்டைகள் வரை கரி கிடைக்கிறது.
ஒரு மூட்டை சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மூட்டை ரூ.1,500 வரை கரி விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இத்தொழிலைப் பாதுகாக்க தொடர்ந்து விறகு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கரிக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.