தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்தில் வடபழனி, கெங்கையம்மன் கோவில் தெருவில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் அருண்ராஜ் துண்டுபிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அக்டோபர் 7 வரை மொத்தம் 21,655 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தற்போது டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. பருவமழைக் காலத்தில் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சியைக் கருத்தில் கொண்டு, ஏழு நாட்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு வரும் 3,700 களப்பணியாளர்களை எவ்விதத் தடையுமின்றி ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.
பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்திக்கு வழிவகுத்தால், முதற்கட்டமாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து அலட்சியம் காட்டினால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இத்தகைய
விதிமீறல்களுக்காக ரூ.7.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முன்னர் 590 ஆக இருந்த டெங்கு தீவிரப் பரவல் பகுதிகள்தற்போது தடுப்பு நடவடிக்கைகளால் 300-க்கும் கீழ் குறைந்துள்ளன. மாநிலம் முழுவதும் தற்போது 301 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.