இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிடையே முதலீட்டு வாய்ப்புகள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் கய் பார்மலின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, இந்தியா-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுவிட்சர்லாந்து எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாகும். இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார, வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக நானும், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபரும் ஆலோசித்தோம்.இரு நாடுகளுக்கு இடையேயான முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்திய ஏற்றுமதி பொருட்கள் சுவிட்சர்லாந்து சந்தையை அணுகவும் முடிவு செய்துள்ளோம். விவசாயம், மருந்து, ஜவுளி மற்றும் பொறியியல் பொருட்கள் இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு அதிகம் ஏற்றுமதியாகும். பயோடெக், உயிர் அறிவியல், வங்கி, காப்பீடு, உணவு பதப்படுத்துதல் துறைகளில் சுவிட்சர்நாது நாட்டின் முதலீடு அதிகரிக்கும்.
சுகாதாரம், இயற்கை எரிசக்தி மற்றும் விண்வெளித் துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகள் நடைபெறும். யோகா மற்றும் ஆயுர்வேதா துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசித்தோம். இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக, சுவிட்சர்லாந்தில் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டவை. சர்வதேச அமைதிக்காக இணைந்து பணியாற்றுவோம். மேற்காசிய விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். சர்வதேச சவால்களுக்குத் தீர்வுகாணவும், சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்யவும் நாங்கள் ஒப்புக் கொண்டோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.