வரும் 2028-ம் ஆண்டில் இந்திய வீரர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என ஐபிஆர்சி இயக்குநர் நாராயணன் அப்பு தெரிவித்தார்.
கோவையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட வளாக (ஐபிஆர்சி) இயக்குநர் நாராயணன் அப்பு, இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ககன்யான் திட்டத்திற்கான முதற்கட்ட சோதனைகள் 95 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன், வீரர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 'ஜி1, ஜி2, ஜி3' ஆகிய மூன்று ஆளில்லா விண்கல சோதனைகள் நடத்தப்பட உள்ளன.
இதில், முதல் ஆளில்லா சோதனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும். தொடர்ந்து 6 மாத இடைவெளியில் அடுத்தடுத்த சோதனைகள் நடத்தப்பட்டு, 2028-ம் ஆண்டின் மத்தியில் இந்திய வீரர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போன்று, இந்தியா சார்பில் ‘பாரதிய அந்தரிக்ஷ ஸ்டேஷன்’ (BAS) என்ற சொந்த விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ஐந்து தொகுதிகளைக் (Modules) கொண்ட இந்த விண்வெளி நிலையத்தின் முதல் இரண்டு தொகுதிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் முதல் தொகுதி 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். விண்வெளியில் வீரர்கள் தங்கி இயற்பியல், உயிரியல் மற்றும் நுண் ஈர்ப்பு விசை ஆய்வுகளை மேற்கொள்ள இது சிறந்தத் தளமாக அமையும்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுதள கட்டுமானப் பணிகள் சுமார் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன என தெரிவித்தார்.