சென்னை:
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்துள்ளதால், தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக லாரிகளில் 55 லோடுகள் தக்காளி வரும். தற்போது 35 லோடுகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த 1-ம் தேதி கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. 4-ம் தேதி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. நேற்று (அக்.5) நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.முத்துக்குமார் கூறுகையில் "வறட்சியால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. மேலும் வரத்து குறைந்தால், தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த 1-ம் தேதி முதல் நேற்று வரை அளவில் மாற்றம் இல்லை. கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது" என்றார்.
இதனிடையே, தக்காளியைப் போலவே பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை கோயம்பேட்டில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. கடந்த 4-ம் தேதி முதல் நேற்று வரை ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ரகத்தைப் பொறுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 வரை விற்பனையாகிறது.