செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இளைஞர்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு, வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் மாற வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நொய்டாவில் கல்வி நிறுவன மாணவர்களிடையே நேற்று உரையாற்றிய அவர், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. தரமான கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவை மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும். தேசிய கல்விக் கொள்கை 2020, இணையவழிக் கல்வி மற்றும் ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் ஆகியவை கல்வி மற்றும் ஆய்வு வளங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்றும் மேலும், 2014–15 முதல் 2023–24 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 17.1 கோடி வேலைவாய்ப்புகள் உருவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்துக்கான வாய்ப்புகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் தொழில்நுட்பம் துறைகளில் திறன் வாய்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு 2026-ஆம் ஆண்டுக்கான கொள்கையை வெளியிட்டுள்ளது. சென்னையில் ‘வியன் AVGC-XR’ சிறப்பு மையத்தை உருவாக்கவும், பிற நகரங்களில் இதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி, நடைமுறைத் திறன் மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிப்பது தமிழக இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறவும், படைப்புத் துறைகளில் தொழில் தொடங்கவும் உதவும் என்று குறிப்பிட்டார்.