சென்னை:
ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பாமாயிலை, கடந்த 3 மாதங்களாக லிட்டருக்கு ரூ.11 அதிக விலை கொடுத்து தவெக அரசு கொள்முதல் செய்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து உதயநிதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்புக்கு திமுக ஆட்சியில் அதிக விலை கொடுக்கப்பட்டதாகவும், தவெக ஆட்சியில் விலை குறைந்து வாங்கப்படுவதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது உண்மை அல்ல. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் ரூ.112.69-ஆக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பு கொள்முதல் விலை, திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99-ஆக குறைக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், திமுக ஆட்சியில் சென்ற ஆண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90- க்கும், டிசம்பரில் ரூ.121.95-க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99-க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
திமுக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில் லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம். எனவே, அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.