காஷ்மீரிலிருந்து 4 கண்டெய்னர்களில் 60 டன் (60,000 கிலோ) ஆப்பிள் கொண்டு வரப்பட்டதால் விலை குறைந்தது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமார் 80 பழக்கடைகள், 20 மொத்த கமிஷன் மண்டிகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் உள்நாடு மற்றும் நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி, ஈரான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆப்பிள்கள் இறக்குமதியாகிறது.
வெளிநாட்டு ஆப்பிள் கிலோ ரூ.200 முதல் ரூ.360 வரை விற்றது. இந்நிலையில், கடந்த 20 நாளாக காஷ்மீர் ஆப்பிள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடக்கத்தில் கிலோ ரூ.200க்கு விற்பனையானது. தற்போது, வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது.
காஷ்மீர் ஆப்பிள் பார்க்க பளீச்சிடும் அழகும், சாப்பிட சுவையும் நிறைந்துள்ளதால், மக்கள் வெளிநாட்டு ஆப்பிள்களை நிராகரித்து உள்நாட்டு ஆப்பிளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், காஷ்மீரிலிருந்து 4 கண்டெய்னர் லாரிகளில் 60 டன் ஆப்பிள் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கமிஷன் மண்டி உரிமையாளர் ஆர். இக்பால் சேட் கூறுகையில், "காஷ்மீர் ஆப்பிள் வருகையால் வெளிநாட்டு ஆப்பிள் வருகை குறைந்துள்ளது. 18 கிலோ வெளிநாட்டு ஆப்பிள் பெரியது ஒருபெட்டி ரூ.4,200-க்கும், சிறியது 10 கிலோ ரூ.2,100 விற்பனையானது.
காஷ்மீர் ஆப்பிள் பெரியது 14 கிலோ ரூ.1,700-க்கும், சிறியது 16 கிலோ ரூ.1,400- க்கு விற்கப்படுகிறது. இது சில்லறையில் சிறியது ரூ.150-க்கும், பெரியது 180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாட்டு ஆப்பிள்களைவிட காஷ்மீர் ஆப்பிள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருப்பதால் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர்" என்றார்.