திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஜோதி யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நேற்று நடந்தது.மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: “சட்டப்பேரவையிலும், மக்கள் மத்தியிலும் தமிழக முதல்வர் விஜய், சினிமா வசனங்களைப் பேசி வருகிறார். அதிலும், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பேசி வருகிறார். இப்படிப்பட்டவர்கள் முதல்வராக தொடர்ந்தால், நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் ஏற்படுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கஞ்சா, போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட கொலைகள், 200-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 150-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 30 பேர் தவெக-வைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஆட்சி சமூக வலைதளங்களில் மட்டுமே நடக்கிறது. ஜூலை மாத முதல் ஜிஎஸ்டி வசூலில் பிற மாநிலங்கள் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்தில் 4,000 மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற ஏடிஎம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அக்டோபர் 5ம் தேதி டெண்டர் விடத் திட்டமிட்டுள்ளனர். இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெறவுள்ளது. பத்திரப்பதிவு, நகராட்சி, மாநகராட்சிகளிலும் ஊழல் மலிந்து காணப்படுகிறது" இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.