புதுடெல்லி:
கிரிப்டோ நாணயங்களைப் பொறுத்தவரை இந்தியா தொடர்ந்து எச்சரிக்கையான அணுகுமுறையையே கடைப்பிடிக்கும். அதேநேரத்தில், அவற்றின் அடிப்படையில் செயல்படும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கவுடில்யா பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: கிரிப்டோ சொத்துகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படும் பகிரப்பட்ட பேரேடு தொழில்நுட்பம், சொத்துகளை டிஜிட்டல் குறியீடுகளாக மாற்றும் முறை உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவற்றில் சில தொழில்நுட்பங்களை ரிசர்வ் வங்கியும், அரசு-தனியார் கூட்டாண்மை முறையிலும் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், கிரிப்டோ நாணயங்கள் விஷயத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையே தொடரும். நாட்டின் பணவியல் இறையாண்மை, பணவியல் கொள்கை மற்றும் மூலதனப் பரிவர்த்தனைகளில் கிரிப்டோ நாணயங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து கவலை உள்ளது.
குறிப்பாக, மூலதன வரத்து மற்றும் வெளியேற்றத்தில் கட்டுப்பாடுகள் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் கிரிப்டோ நாணயங்களின் தாக்கம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஒரே மதிப்புடைய பணம் பொருளாதாரத்தில் ஒரே வகையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படை கொள்கையிலும் இது சிக்கலை ஏற்படுத்தலாம்.
உள்நாட்டு பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக கிரிப்டோ நாணயங்கள் அவசியம் என்ற நிலை தற்போது இல்லை. இந்தியா உட்பட பல நாடுகளில் உள்நாட்டு பணப்பரிவர்த்தனைகள் ஏற்கெனவே வேகமாகவும், குறைந்த செலவிலும், எளிதாகவும் நடைபெறுகின்றன.
ஆனால், நாடுகளுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளில் இன்னும் சவால்கள் உள்ளன. அதற்கு கிரிப்டோ நாணயங்களுக்கு மாற்றாக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் உள்ளிட்ட பிற தீர்வுகளை ஆராயலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில், முதலீட்டுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு குறைவாக இருப்பதால் கடன்பத்திர வருமான விகிதங்களில் உயர்வு ஏற்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முதன்மையாக உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க நிலையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், உலகளாவிய வட்டி விகித மாற்றங்கள் இந்தியாவின் உண்மையான வட்டி விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.