தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் அன்றாட சில்லறை செலவினங்களுக்கான நிதியை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆண்டுக்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களின் அன்றாட செலவுகளை எதிர்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் களையவும், இச்செலவினங்களுக்காக அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களைச் சார்ந்திருப்பது குறைவதோடு, ஊழலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2026-27ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் விஜய், காவல் நிலையங்களுக்கான எதிர்பாராத செலவு நிதி உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் அங்கு பதிவாகும் குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், காவல் நிலையங்களுக்கு மாதந்தோறும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த எதிர்பாராத செலவு நிதி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் முதல் வகையில், ரூ.3,750-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையில், ரூ.6,000-ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் வகையில், ரூ.8,250-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத செலவு நிதிக்காக மட்டும் ஆண்டுதோறும் 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் நிதியை ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.