நூல் மற்றும் துணி பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் சாயங்கள், ரசாயனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உற்பத்திச் செலவு அதிகரித்து சாய ஆலைகள், நெசவு மற்றும் பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ரியாக்டிவ் டைஸ், காஸ்டிக் சோடா ஆஷ், சோடியம் சல்பேட், பெராக்ஸ்ட், அசிட்டிக் ஆசிட், சாப்ட்னர்ஸ் உள்ளிட்ட முக்கிய உள்ளீடுகளின் விலை சமீப மாதங்களில் 20 முதல் 35 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளதாக தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில ரசாயனங்களின் விலை 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதாக ஈரோடு அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மூலப்பொருள் தட்டுப்பாடு, இறக்குமதி பொருட்கள் வருவதில் தாமதம், சரக்கு கட்டண உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன" என்றார்.
சாய ஆலைகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி கியாஸ் விலை கிலோ ரூ.75-லிருந்து ரூ.200 ஆகவும், விறகு மற்றும் நிலக்கரி விலை டன்னுக்கு ரூ 5 ஆயிரத்திலிருந்து ரூ.8,000 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதனால் சாயக் கட்டணம் இலகு நிறங்களுக்கு கிலோவுக்கு ரூ.10, நடுத்தர நிறங்களுக்கு ரூ.15, அடர் நிறங்களுக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. பதப்படுத்தல் செலவு 15 முதல் 25 சதவீதமும், சில ஜவுளிப் பிரிவுகளில் மொத்த உற்பத்திச் செலவு 30 முதல் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அக்டோபர் 5ம் தேதி திருப்பூரில் சுமார் 460 சாய ஆலைகள் வேலைநிறுத்தம் செய்ததால், நாளொன்றுக்கு ரூ.16.8 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆலைகள் நாளொன்றுக்கு சுமார் 2,800 டன் துணிகளை பதப்படுத்துகின்றன; 50,000-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மூலப்பொருள் விநியோகத்தைச் சீர்படுத்தி, விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
- மூலப்பொருள் தட்டுப்பாடு, இறக்குமதி பொருட்கள் வருவதில் தாமதம், சரக்கு கட்டண உயர்வு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை சவால்களாக உள்ளன.
- சாய ஆலைகள் நாளொன்றுக்கு சுமார் 2,800 டன் துணிகளை பதப்படுத்துகின்றன.