தமிழகத்தின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு முக்கியப் போக்குவரத்து மையங்களாகத் திகழும் சென்னை, காமராஜர் (எண்ணூர்) துறைமுகங்கள், கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 3.96 லட்சம் வாகனங்களைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025–2026 நிதியாண்டில் சென்னைத் துறைமுகம் 2.04 லட்சம் வாகனங்களையும், காமராஜர் துறைமுகம் 1.92 லட்சம் வாகனங்களையும் கையாண்டு அசத்தியுள்ளன. குறிப்பாக, காமராஜர் துறைமுகத்தின் வாகனக் கையாளுதல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.86 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், சென்னைத் துறைமுகம் 57.90 மில்லியன் டன்னும், காமராஜர் துறைமுகம் 49.08 மில்லியன் டன்னும் என இரு துறைமுகங்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 107 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளன.
கட்டணச் சலுகைகள்
ஏற்றுமதியாளர்களின் செலவைக் கட்டுப்படுத்த துறைமுகங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. இதன்படி, சென்னை துறைமுகத்தில் ரோ-ரோ (Ro-Ro) கப்பல்களால் ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கு 20 நாள் வரையிலும், மற்ற சரக்குகளுக்கு 30 நாள் வரையிலும் இலவச சேமிப்புக் காலம் அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் கார் ஏற்றுமதிக்காக குறிப்பிட்ட கட்டணங்களில் 70 சதவீதம் வரை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இதேபோல், காமராஜர் துறைமுகம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இலவச சேமிப்புக் காலத்தை கூடுதலாக 20 நாள் நீட்டித்து மொத்தம் 40 நாளாக வழங்கி வருகிறது. மேலும், ரோ-ரோ கப்பல்களுக்கான கட்டணச் சலுகை வரும் 2027 ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு
வாகன ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளும் அதிநவீன முறையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காமராஜர் துறைமுகத்தில் ரூ.440 கோடி செலவில் செய்யப்பட்ட 6-வது கட்ட ஆழப்படுத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. இதன் மூலம் துறைமுகத்தின் ஆழம் 18 மீட்டராக உயர்த்தப்பட்டு, 1.70 லட்சம் டன் வரையிலான ராட்சத கப்பல்களைக் கையாளும் திறன் எட்டப்பட்டுள்ளது.
துறைமுகங்களின் இந்த சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், இலவச சேமிப்பு மற்றும் கட்டணச் சலுகைகள் காரணமாக, தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் தளவாடச் செலவு பெருமளவு குறைந்து வருகிறது.