எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வசதியாக பயணிகளின் தேவையை கருதி ரயில்களின் பெட்டிகளை எல்ஹெச்பி வகை பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்தப் பெட்டிகள் வழக்கமான பெட்டிகளை விட நீளம் அதிகம். முன்பதிவு பெட்டிகளில் 8 படுக்கைகள் கூடுதலாக இருக்கும். இந்த நவீன பெட்டிகளை கொண்ட ரயில்களாக மாற்றும் பணிகள் தெற்கு ரயில்வே உள்ளிட்ட ரயில்வே மண்டலங்களில் 2001-ம் ஆண்டு முதல் தொடங்கியது.
இப்போது தெற்கு ரயில்வே இயக்கும் 97 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் 75 சதவீத எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்ஹெச்பி பெட்டிகள் உடைய ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் இயங்கும் மேலும் சில ரயில்கள் எல்ஹெச்பி பெட்டிகளாக இன்று முதல் மாற்றப்பட உள்ளன.
எழும்பூர்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் (22661) இன்று முதல் எல்ஹெச்பி ரயிலாக புறப்படும். அதேபோல் எழும்பூர்-திருச்செந்தூர் இடையிலான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இப்போது எல்ஹெச்பி பெட்டிகளை கொண்ட ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு ரயில்நிலையங்கள் வழியே தென் மத்திய ரயில்வே இயக்கும் சாம்ராஜ் நகர்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் எல்ஹெச்பி பெட்டிகளை கொண்ட ரயிலாக மாறுகிறது.
இதே பெட்டிகளைக் கொண்ட வண்டி தொடர் தான் திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.
அதனால் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் எல்ஹெச்பி பெட்டிகளை கொண்ட ரயிலாக இயங்கும்.