நாட்டில் இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சந்தைக்கு வந்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 3.58 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் சரிந்துள்ளது.
இதுகுறித்து சந்தை ஆய்வு நிறுவனம் ஓம்டியா தெரிவிக்கையில், "கடந்த 10-ஆண்டுகளில் 3-ம் காலாண்டில் பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும் என்றது.
பண்டிகைக் காலம் தொடங்கியபோதிலும், ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு மற்றும் நுகர்வோரின் எச்சரிக்கையான செலவினப் போக்கு காரணமாகப் புதிய கைப்பேசிகளுக்கான தேவை குறைந்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து, நிறுவனங்கள் கைப்பேசிகளின் விலையை உயர்த்தின. இதனால், ஏற்கெனவே பயன்படுத்தும் கைப்பேசிகளை மாற்றிப் புதியவற்றை வாங்குவதைப் பல நுகர்வோர் தள்ளிப்போட்டுள்ளனர்.
மேலும், தீபாவளிப் பண்டிகை அக்டோபரில் வருவதால், பண்டிகைக் கால விற்பனைக்கான சரக்குகளைச் சில்லறை விற்பனையாளர்கள் முன்கூட்டியே இருப்பு வைப்பதும் அக்டோபருக்கு மாறியுள்ளது. இதுவும் 3-வது காலாண்டில் சந்தைச் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
இந்தக் காலாண்டில் 67 லட்சம் கைப்பேசிகளைச் சந்தைக்கு அனுப்பிய சாம்சங் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. விவோ 64 லட்சம் கைப்பேசிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒப்போ 49 லட்சத்துடன் மூன்றாவது இடத்திலும், சியோமி 47 லட்சத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளன என்று ஓம்டியா தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன் பாதிப்பு ஆகியவை, குறிப்பாகக் குறைந்த விலை கைப்பேசிகள் பிரிவில், விற்பனையாளர்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.