ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவரும் தங்கம் விலை, வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கணித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய போர் மற்றும் பொருளாதார சூழல்களால் அக்டோபர், நவம்பர் மாதங்கள் வரை தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற, இறக்கங்கள் இன்றி தற்போதைய நிலையே தொடரும். ஆனால், நவம்பர் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கும். குறிப்பாக, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.25,000 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது” என்றார்.
மார்ச் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலை குறையுமா என்ற கேள்விக்கு, "தங்கம் விலை இரண்டு லட்சத்தை தொட்ட பிறகு பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதிகபட்சம் ஒரு சிறிய அளவிலான சரிவு மட்டுமே இருக்கலாமே தவிர பெரும் வீழ்ச்சி இருக்காது.
எதிர்காலத்தில் இதன் விலை பெருமளவு அதிகரிக்கும் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கும், தங்க நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கும் இதுவே சரியான தருணம்" என அறிவுறுத்தியுள்ளார்.