சென்னை:
ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பால் கொள்முதல் குறைந்துள்ளதாகக் கூறப்படுவதால், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், சில ஆவின் விற்பனை நிலையங்களில் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆவின் நிறுவனம் தினமும் சுமார் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. இதில் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பால் போக, மீதமுள்ள பாலை கொண்டு பால் பவுடர், நெய், வெண்ணெய், பனீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
பால் கொள்முதலை அதிகரிக்கும் நோக்கில், கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆவினுக்கு கிடைக்க வேண்டிய பாலை சிலர் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பால் கொள்முதல் குறைந்து, அதன் தாக்கம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தியிலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்புக்காக நெய், வெண்ணெய்க்கு தேவை அதிகரிக்கும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படாமல் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீராக மேற்கொள்ள வேண்டும் என வாடிக்கையாளர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆவின் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.