கோவை:
கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இயக்குநர் எஸ்.தர்மராஜ் தெரிவித்தார்.
விமான நிலையத்தின் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.தர்மராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுமார் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.
விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக கார் பார்க்கிங் வசதியை அதிகரிப்பதுடன், கார்கோ சேவைப் பகுதியையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மேலும், கோவையைச் சேர்ந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, கார்கோ சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜி யாத்ரா சேவை குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, பயணிகள் அச்சேவையை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.