இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசியின் முக்கிய நோக்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற பணவியல் சூழலை உருவாக்குவது ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்களன்று தனது மூன்று நாள் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தைத் தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் FCNR (B) மூலமாக வெளிநாட்டிலிருந்து 127 பில்லியன் டாலர் அளவில் டெபாசிட்கள் பெறப்பட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் இன்னமும் ரூ.96 என்ற அளவிலேயே இருப்பது போன்றவை வட்டி விகித உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.
அதாவது, ராய்ட்டர் செய்தி நிறுவனம் எடுத்த கருத்துக் கணிப்பில் 60 சதவீத பொருளாதார வல்லுநர்கள், வட்டி விகிதம் இன்றைய கூட்டத்தில் கூட்டப்படலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். சில பொருளாதார வல்லுநர்கள் இது 50 புள்ளிகள் சதவிகிதமாகக் கூட இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. கடந்த மானிடரி பாலிசி 4 கூட்டங்களில் இதில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் தளர்வதற்கான சிறிய அறிகுறிகள் இருந்தாலும், நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன, அமெரிக்க மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை செப்டம்பர் மாதம் 25 புள்ளிகள் சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இது இந்திய பங்குச் சந்தையில் இருந்து பெரிய அளவில் முதலீடுகளை எடுத்து சென்று இருக்கிறது.
பிப்ரவரி 2023-க்குப் பிறகு முதல்முறையாக ரெப்போ வட்டி உயர்வை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக டிசம்பர் 2025 நடந்த கூட்டத்தில் 25 புள்ளிகள் சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு 5.25 சதவிகிதமாக தற்போது இருந்து வருகிறது. அது இதுவரை தொடர்ந்து வருகிறது.
மானிடரி பாலிசி கூட்டத்தில் என்னென்ன முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன?
1. ரெப்போ ரேட்
வங்கிகள் ஆர்பிஐ-யிடம் இருந்து குறுகிய காலத்திற்கு பணம் கடன் வாங்கும் போது செலுத்தும் முக்கிய வட்டி விகிதம்.
2. பணவீக்கம் (Inflation)
நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வு எவ்வாறு உள்ளது என்பதை மானிடரி பாலிசி கமிட்டி கவனிக்கிறது. பணவீக்கம் அதிகமாக இருந்தால் வட்டி விகிதத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். கடந்த 3 மாதங்களாக சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
3. பொருளாதார வளர்ச்சி
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, தொழில் உற்பத்தி, முதலீடு, நுகர்வு போன்றவற்றை ஆய்வு செய்து பொருளாதாரத்திற்கு ஏற்ற முடிவுகள் எடுக்கப்படுகிறது.
4. Cash Reserve Ratio மற்றும் Liquidity தொடர்பான நடவடிக்கைகள்
வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய Cash Reserve Ratio (CRR), சந்தையில் பணப்புழக்கம் போன்றவற்றையும் ரிசர்வ் வங்கி தனது மானிடரி பாலிசி கூட்டத்தில் முடிவுகள் எடுக்கிறது. தற்போதைய CRR 3 சதவீதம் ஆக உள்ளது.
ரெப்போ சதவிகிதம்
குறைக்கப்பட்டால், கூட்டப்பட்டால் என்ன ஆகும்?
மானிடரி பாலிசி ரெப்போ ரேட்டை குறைத்தால் வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டி குறையும். இதனால் பொதுமக்களுக்கு, கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி சிறிது குறையும். பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும்.
ரெப்போ ரேட்டை உயர்த்தினால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டி கூடும். இதனால் பொதுமக்களுக்கு, கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி சிறிது கூடும். இதனால், கடன் தேவை குறையலாம், செலவினம் குறையலாம். இது பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.
கூட்டப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்?
1. கடன்களின் மீதான வட்டி விகிதங்கள் கூடும். குறிப்பாக, வீட்டுக் கடன், தனிநபர் கடன் வாங்கியவர்கள் அதிகமாக இ.எம்.ஐ. கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2. வங்கிகளில் டெபாசிட்களில் பணத்தைப் போட்டு வைப்பவர்களுக்கு வட்டி விகிதங்கள் கூடும் வாய்ப்பு இருக்கிறது. இது குறிப்பாக சீனியர் சிட்டிசன்களுக்குப் பயனளிக்கும்.
3. வட்டி விகித உயர்வு எப்போதும் பங்குச் சந்தைகளை பதம் பார்த்து விடும். காரணம், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை கூட்டும்போது வங்கிகளும் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதே அளவு கூட்டும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், கார்பொரேட்களின் வட்டிச் சுமை கூடும் அபாயம் உள்ளது. ஆதலால், ரெப்போ வட்டி விகிதம் கூடினால் சந்தைகளில் அதன் எதிரொலி இருக்கும்.