மதுரை மாவட்ட ஆவின் நிறுவனத்தின் கீழ் கிராம அளவில் செயல்படும் 629 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், தினமும் சுமார் 1.41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு தினசரி பால் கொள்முதல் விவரங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் புதிய தகவல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலின் அளவு, தரம், கொழுப்புச்சத்து, இதர சத்துக்கள் மற்றும் சங்கக் குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
மாவட்ட நிர்வாகம், பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகம் இணைந்து இந்த நடைமுறையை செயல்படுத்தியுள்ளது. பால் கொள்முதல் தொடர்பான விவரங்களை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை விருதுநகர் தனியார் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் கார்த்திகேயன், கெவினாஷ் வர்மன் ஆகியோர், மதுரை ஆவின் பொதுமேலாளர் முத்துமாதவனின் ஆலோசனையின்படி உருவாக்கியுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல்களை அனுப்பும் இந்த புதிய சிறப்பு சேவையை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தொடங்கிவைத்தார்.