மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், செய்தித்தாள் தயாரிப்புக்கான நியூஸ்பிரிண்ட் காகிதம் தயாரிக்கும் நிறுவனங்கள் நிலக்கரி தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. இதையடுத்து, நிலக்கரி ஒதுக்கீட்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய செய்தித்தாள் உற்பத்தியாளர்கள் சங்கம் (INMA) பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய செய்தித்தாள் உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொதுத் துறை நிறுவனங்களுடன் நீண்டகால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை (FSA) மேற்கொண்டிருந்தாலும், ஒப்பந்தப்படி போதிய நிலக்கரி கிடைப்பதில்லை. ரயில் மற்றும் சாலை வழியாக நிலக்கரியை அனுப்புவதில் ஏற்படும் தாமதம், சீரற்ற விநியோகம் ஆகியவை உற்பத்திப் பணிகளைப் பாதிக்கிறது. தற்போதைய நடைமுறையில், நிலக்கரி விநியோகத்தில் 95 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செல்கிறது. இதனால் நியூஸ்பிரிண்ட் உள்ளிட்ட தொழில் துறைகளுக்கு ஒப்பந்தப்படி நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, மின் துறை மற்றும் மின் சாராத தொழில் துறைகளுக்கு முறையே 75:25 என்ற விகிதத்தில் நிலக்கரியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு (CCEA) பரிந்துரைத்த கொள்கையை அமல்படுத்த வேண்டும். நிலக்கரி தட்டுப்பாட்டால், உற்பத்தியாளர்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி இருப்பு போதிய அளவில் இல்லை. இதனால், தொழில் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதில் நடைமுறைச் சவால்கள் எழுந்துள்ளன.
இந்த மின் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலக்கரி இருப்பு 5.723 கோடி டன்னாக உள்ள நிலையில், 81 மின் நிலையங்களில் இருப்பு 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. இதனால், மின் உற்பத்தித் துறையின் தேவையையும் தொழில் துறையின் நிலக்கரித் தேவையையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.