திருப்பூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.இடைத்தேர்தலில் அரசியல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், பிற கட்சியினர் செல்போனில் கூகுள் பே மூலம் பணம் செலுத்துவது எப்படி என்பது குறித்து குறிப்பெடுக்கும் நிலை உள்ளது. தேர்தல் ஆணையம் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிக் கணக்குகளில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படும். ஆனால், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல கோடி ரூபாய் பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இவ்வளவு பணம் எப்படி பதுக்கி வைக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரங்களில் போதிய அளவில் பேசவில்லை. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும், தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவோம் என்று மு.வீரபாண்டியன் கூறினார்.