Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு - வாராந்திர புள்ளிவிவரம் இதோ..

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு - வாராந்திர புள்ளிவிவரம் இதோ..

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 33.224 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 18.343 பில்லியன் டாலர் சரிந்து 747.557 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர புள்ளிவிவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முந்தைய செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 765.901 பில்லியன் டாலராக இருந்தது. அந்த வாரத்திலும் கையிருப்பு 14.881 பில்லியன் டாலர் குறைந்திருந்தது. இதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 33.224 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.


செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சமான 785.706 பில்லியன் டாலரை எட்டியிருந்தது. இந்த சாதனை அளவை எட்டுவதற்கு, வெளிநாட்டு நாணய டெபாசிட்களை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் திரண்ட, அதிக அளவிலான டாலர் வரத்தும் முக்கிய காரணமாக இருந்தது. ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை இத்தகைய திட்டங்கள் மூலம் 136 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி வரத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட அழுத்தத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ மேற்கொண்ட டாலர் விற்பனை மற்றும் யூரோ, யென் உள்ளிட்ட நாணயங்களின் மதிப்பு மாற்றமும் சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. உச்ச அளவுடன் ஒப்பிடுகையில் தற்போது கையிருப்பு 38.149 பில்லியன் டாலர் (சுமார் 4.9 சதவீதம்) குறைந்துள்ளது.


மொத்த கையிருப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் வெளிநாட்டு நாணய சொத்துகள் செப்டம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 15.570 பில்லியன் டாலர் குறைந்து 615.411 பில்லியன் டாலராக சரிந்துள்ளன. யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களும் வெளிநாட்டு நாணய சொத்துகளின் டாலர் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.


இதேகாலகட்டத்தில், ஆர்பிஐ வசமுள்ள தங்கக் கையிருப்பின் மதிப்பு 2.591 பில்லியன் டாலர் குறைந்து 108.701 பில்லியன் டாலராக உள்ளது. மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு சுமார் 14.5 சதவீதமாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு எடுப்பு உரிமைகளான எஸ்டிஆர் மதிப்பு 97 மில்லியன் டாலர் குறைந்து 18.642 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது. அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு நிலை 86 மில்லியன் டாலர் குறைந்து 4.804 பில்லியன் டாலராக உள்ளது.

   
அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், பிற நாணயங்களின் மதிப்பீட்டு தாக்கம் மற்றும் ஆர்பிஐ மேற்கொள்ளும் சந்தை நடவடிக்கைகள் ஆகியவை வாராந்திர கையிருப்பு அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனினும், செப்டம்பர் 25-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஏற்பட்ட சரிவுக்கான குறிப்பிட்ட காரணத்தை ஆர்பிஐ தனது புள்ளிவிவர அறிக்கையில் தனியாக குறிப்பிடவில்லை.

முந்தைய செய்தி
வலுக்கட்டாயமாக வெளியேற்றம் - டேங்கர் லாரிகள் திடீர் வேலைநிறுத்தம்
அடுத்த செய்தி
வாக்காளர்களுக்கு ஜிபே-யில் பட்டுவாடா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

தொடர்புடைய செய்திகள்