ஆயுதபூஜை வரும் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோட்டில் பொரி உற்பத்தி பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொரி மூட்டைக்கு ரூ.50 விலை உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜை வீடு, கடை, பணிமனை, கல்வி நிறுவனம், மற்றும் வாகனங்கள் உள்ளிட்டவைகளில் கொண்டாடும் போது, பொரி பூஜையில் முக்கிய பிரசாதமாக வைக்கப்படுகிறது. பிறகு, ஊழியர்கள், உறவினர்கள், அக்கம்-பக்கத்தினருக்கு பொரி வழங்கப்படுகிறது.பொரி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ‘இன்டால்-64’ நெல் ரகம் கர்நாடகாவின் தாவணிக்கரை, மாண்டியா, மைசூர், கொள்ளேகால் பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, பொரி உற்பத்தியாளர் சுப்ரமணியம் கூறும்போது, "நெல்லை வேகவைத்து அரவை மில்லில் அரிசியாக்கி, உப்பு, சர்க்கரை, சோடா உப்பு கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் மிதமான சூட்டில் வறுத்து பொரி தயாரிக்கப்படுகிறது. ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. இதனால், பொரி 3 மாதம் வரை கெட்டு போகாது. 48 பக்கா (படி) கொண்ட பொரி மூட்டை ரூ.850 முதல் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட பொரி மூட்டைக்கு சுமார் ரூ.50 விலை உயர்ந்துள்ளது.
கூலி உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, அரிசி விலை உயர்வு காரணமாக பல உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே பொரி உற்பத்தி நடக்கிறது" என்றார்.
மின்கட்டணத்தில் சலுகை உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க முன்வர வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.