கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்டகால கடன்கள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு செவ்வாய்கிழமையிலும் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டுவசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறை கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் நடத்தப்படும்.
வேளாண் இயந்திரமாக்கல், குளிர்பதனக் கிடங்குகள் அமைத்தல், கறவை மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.50 கோடி மதிப்பிலான நீண்டகால கடன்கள் சிறப்பு முகாமில் வழங்கப்படும். இந்தப் பிரிவில் தகுதி உடையவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை நீண்டகால கடன் வழங்கப்படும்.
இந்தக் கடன்களை பெறுவதற்கு தங்கள் பகுதியில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் உரிய ஆவணங்களுடன் பொதுமக்கள் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் புகைப்படம், அடையாளச்சான்று, முகவரி சான்று மற்றும் நில அடமான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.