இந்தியாவில் ஏஐ, தரவு மையங்களுக்கான சாதனங்களை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜேபில் நிறுவனத்துடன், அதானி குழுமம் கைகோர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரித்து வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேபில் நிறுவனம், இந்தியாவின் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, இரு நிறுவனங்களும் 50: 50 என்ற விகிதத்தில் பங்குகளைக் கொண்ட கூட்டு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டு நிறுவனம், ஏஐ ரேக்குகள், சர்வர்கள், சேமிப்புச் சாதனங்கள் மற்றும் தரவு மையங்களுக்கு தேவையான நெட்வொர்க்கிங் சாதனங்களைத் தயாரித்து ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடும். மேலும், ஏஐ அமைப்புகளுக்கான மின்சார விநியோக அலகுகள், திரவக் குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் மின்மாற்றிகள் உள்ளிட்ட சாதனங்களையும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பல ஜிகாவாட் அளவிலான ஏஐ ரேக்குகளைத் தயாரிக்கும் திறன் உருவாக்கப்படும்.
இந்தியாவின் தரவு மையங்கள் திறன், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5 ஜிகாவாட் முதல் 8 ஜிகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஏஐ மற்றும் தரவு மையங்களின் உள்கட்டமைப்புக்கான சாதனங்களின் தேவையும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம், இந்தியாவில் ஏஐ மற்றும் டேட்டா சென்டர் உள்கட்டமைப்புத் தயாரிப்பு தளத்தை உருவாக்குவது குறித்து இரு நிறுவனங்களும் ஆராய்ந்து வருவதாக அறிவித்திருந்தன. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.
ஆப்பிள் நிறுவன உதிரிபாக தயாரிப்பாளரான ஜேபில் நிறுவனம், 2027ஆம் நிதியாண்டில் 44.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4.24 லட்சம் கோடி ) வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கிறது. மேலும், ஒரு பங்குக்கான சரிசெய்யப்பட்ட ஆண்டு வருவாய் 17.55 டாலராக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.