மேகமலை புலிகள் காப்பகம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2-வது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பல தலைமுறையாக வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட்டு, அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.இதற்கு ஆட்சியர் பதிலளித்து பேசியதாவது: 'மேகமலை புலிகள் காப்பக பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேகமலை விவகாரத்தில் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் ஆவணங்களை தொகுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் 2-வது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் மாநில அரசு கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவோம். மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது' என்றார்.