சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி நாரணப்பஞ்சாவடி பகுதியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயில் கிடங்கு உள்ளது. இங்கிருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் சுமார் 100 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் டேங்கர் லாரி டிரைவர்கள், இரவு நேரங்களில் தங்களது வாகனங்களை ஆயில் கிடங்கு வளாகத்தில் நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓய்வறையில் தங்குவது வழக்கம். பின்னர் அதிகாலையில் லாரிகளில் லோடு ஏற்றிக்கொண்டு தங்களது பணிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓய்வறையில் தூங்கிக்கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்களை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள், நேற்று காலை வழக்கம்போல் லாரிகளில் லோடு ஏற்றாமல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். டேங்கர் லாரிகளை கிடங்கு முன் வரிசையாக நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள் கூறுகையில், "அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரியத் தீர்வு காண்பதுடன், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே மீண்டும் பணிக்குத் திரும்புவோம்" எனத் தெரிவித்தனர்.
டிரைவர்களின் இந்தத் திடீர் வேலைநிறுத்தம் காரணமாகச் சங்ககிரி ஆயில் கிடங்கில் இருந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.