இந்தியாவில் கோகோ-கோலாவின் இரண்டாவது பெரிய பாட்டிலிங் நிறுவனமான எஸ்எல்எம்ஜி பெவரேஜஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.20,000 கோடி விற்று முதலை எட்டவும், அதற்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பரிதோஷ் லதானி கூறும்போது, ‘‘தற்போது சுமார் ரூ.9,000 கோடியாக உள்ள விற்றுமுதல், அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடியையும், மூன்று ஆண்டுகளில் ரூ.15,000 கோடியையும் தாண்டும்.2025–26 நிதியாண்டில் நிறுவனம் சுமார் 25 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்துள்ளது.
பிஹாரின் பக்சார் ஆலையில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஆலைக்கான கட்டுமானம் தொடங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்ட ரூ.5,000 கோடி முதலீடு அடுத்த மூன்று ஆண்டுகளில் தாண்டப்படும்.
தற்போதைய நிமிடத்துக்கு 35,000 பாட்டில்கள் உற்பத்தித் திறனுடன், ஐந்து ஆண்டுகளில் மேலும் 10,000 பாட்டில்கள் திறன் சேர்க்கப்படவுள்ளது.
சிறுநகரங்கள், கிராமப்புறங்களில் விநியோகம் மற்றும் குளிரூட்டும் வசதிகளையும் நிறுவனம் விரிவுபடுத்துகிறது.
உலகளவில் முதல் 15 கோகோ-கோலா பாட்டிலிங் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள எஸ்எல்எம்ஜி, ஐந்து ஆண்டுகளில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் நுகர்வு வளர்ச்சியைப் பயன்படுத்தி விரிவாக்கத்தைத் தொடர உள்ளோம், ’’ என்றார்.