சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், நிதி மேலாளர் நேரடியாகப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யும் தனது முதல் பங்குத் திட்டமான ‘சாய்ஸ் லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் ஒரே திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய இது வாய்ப்பளிக்கிறது. அக்டோபர் 20-இல் தொடங்கிய புதிய நிதி வெளியீடு நவம்பர் 3-ம் தேதி நிறைவடைகிறது. ஒரு யூனிட்டின் விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பெரிய நிறுவனப் பங்குகளிலும் நடுத்தர நிறுவனப் பங்குகளிலும் தலா குறைந்தபட்சம் 35 சதவீதத்தை முதலீடு செய்யும். மீதமுள்ள 30 சதவீதம் வரை சிறிய நிறுவனப் பங்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிற முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்யலாம்.
நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 மொத்த வருவாய் குறியீடு இத்திட்டத்தின் செயல்திறனை ஒப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்கும். தினசரி மற்றும் வாராந்திர முறையான முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்ஐபி) குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டம் மிக அதிக இடர் கொண்டதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை குறியீட்டு நிதித் திட்டங்களை வழங்கிவந்த நிலையில், தற்போது நிதி மேலாளர் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவைக் குழுமமான சாய்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்த மியூச்சுவல் ஃபண்டின் ஆதரவு நிறுவனமாகும்.