Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - வாகனக் கடன் இ.எம்.ஐ அதிகரிக்கும்!

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - வாகனக் கடன் இ.எம்.ஐ அதிகரிக்கும்!

வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரெப்போ வட்டி முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி சுமை அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ரெப்போ வட்டி தொடர்பாக முடிவெடுக்கும். மும்பையில் நேற்று ஆர்பிை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், ரெப்போ வட்டி உயர்வுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுவரை இருந்து வந்த நடுநிலைக் கொள்கையை மாற்றி, கட்டுப்படுத்தப்பட்ட இறுக்கம் என்ற நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. வருங்காலங்களில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் வட்டி மேலும் உயரலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேநேரத்தில், குறுகிய காலத்தில் வட்டி குறைப்புக்கான வாய்ப்பு இல்லை என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரியில் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வட்டி குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 2024 டிசம்பரில் ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும். இதனால், வங்கிகளில் வீடு, வாகனக் கடன் பெற்றவர்களுக்கு, இஎம்ஐ அல்லது திருப்பிச் செலுத்தும் காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பணவீக்க கணிப்பு உயர்வு

ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவமழை குறைவு ஆகியவை முக்கியக் காரணங்களாகும். மேற்காசியப் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. பதற்றம் நீடிக்கும்பட்சத்தில், எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தக் கூடும். இந்த ஆண்டு எல் நினோ தாக்கத்தால் பருவமழை குறைந்துள்ளது.
இதையடுத்து, 2026-27 நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பை 5 சதவீதத்தில் இருந்து 5.20 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
இதேபோல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 2026-27 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 6.70 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வலுவான உள்நாட்டு தேவையும் சேவைத் துறையின் செயல்பாடும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு இந்திய 10 ஆண்டு அரசு பத்திரங்களின் வருவாய் 7.27 சதவீதம் வரை உயர்ந்தது. இது ஒரே நாளில் சுமார் 7 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிப்பாகும்.

“பணவீக்க சூழல் சாதகமாக இல்லை”
கடந்த ஆண்டைப்போல தற்போது பணவீக்கமும், அதன் எதிர்கால நிலையும் சாதகமாக இல்லை. எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்ப கொள்கை வட்டி விகிதத்தை மறுசீரமைப்பது அவசியமாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை நிலைப்பாடு, வட்டி குறைப்பு தற்போது பரிசீலனையில் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இனி பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழலைப் பொறுத்து வட்டியை உயர்த்துவது அல்லது தற்போதைய நிலையில் தொடர்வது மட்டுமே வாய்ப்புகளாக இருக்கும். -சஞ்சய் மல்ஹோத்ரா ஆளுநர், ஆர்பிஐ.
முந்தைய செய்தி
Women police undergo karate training
அடுத்த செய்தி
ரூ.250 கோடியில் ஆலை அமைக்கும் கோத்ரேஜ் - எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்