இந்தோனேஷியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் ரூ.250 கோடியில் ஆலை அமைக்கிறது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆசிப் மல்பாரி கூறியதாவது:
இந்தோனேஷியாவில் கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 75–80 சதவீதமாக உள்ளது. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆலையை விரிவாக்கம் செய்கிறோம்.இதன் மூலம் வீடு, தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் உற்பத்தி 15 சதவீதம் அதிகரிக்கும் இந்த ஆலை இந்தோனேஷிய சந்தைக்கு சேவை செய்வதுடன், எதிர்காலத்தில் ஏற்றுமதி தளமாகவும் செயல்படும். முதல்கட்டமாக வீட்டு பூச்சிக்கொல்லி பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில் 2.5 ஹெக்டேரில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது" என்றார்.
டிஜிட்டல் பிரிவுத் தலைவர் ராஜேஷ் சேதுராமன் கூறும்போது, "தொழில்நுட்பம், தரவுகள் உற்பத்தி செயல்பாடுகளை இணைத்து புதிய ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது" என்றார்.
மனிதவளத் தலைவர் வைபவ் ராம் கூறும்போது, "கோத்ரேஜ் நிறுவனம் 2010 முதல் இந்தோனேஷியாவில் செயல்படுகிறது. வர்த்தகம் இதுவரை 4.5 மடங்கு வளர்ந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு, எரிசக்தி கண்காணிப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகளுக்கு ஆலையில் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.