எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ புரூடென்ஷியல், கோட்டக் உள்ளிட்ட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள், தங்களது தங்க நிதிகளுக்கான திட்டங்களில் (கோல்டு ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்) புதிய முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் நேரடியாகத் தங்கத்தை வாங்காமல், தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகளில் (கோல்டு இடிஎஃப்) முதலீடு செய்கின்றன.
புதிய மற்றும் கூடுதல் மொத்த முதலீடுகள், பிற திட்டங்களிலிருந்து முதலீடுகளை மாற்றுவது, முறையான முதலீட்டுத் திட்டங்கள் (எஸ்ஐபி), முறையான பரிமாற்றத் திட்டங்கள் (எஸ்டிபி) ஆகியவற்றுக்கான புதிய பதிவுகள் உள்ளிட்ட வரவுகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் தங்கம், வெள்ளி சார்ந்த நிதித் திட்டங்களுக்கும் தடையை விரிவுபடுத்தியுள்ளன.
ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறலாம். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட எஸ்ஐபி மற்றும் தகுதியுள்ள பிற முறையான முதலீட்டுத் திட்டங்களின் தவணைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
செபியின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் தடைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. மேலும் பல நிறுவனங்களும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டக் நிறுவனம் தனது கோல்டு ஃபண்ட், கோல்டு சில்வர் பாசிவ் எஃப்ஓஎஃப் திட்டங்களில் புதிய முதலீடுகளுடன், ஏற்கெனவே உள்ள எஸ்ஐபி தொகையை அதிகரிப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆக்சிஸ் நிறுவனத்தின் கோல்டு அண்ட் சில்வர் பாசிவ் எஃப்ஓஎஃப் திட்டத்தில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கான தடை அக்டோபர் 16 பிற்பகல் 3 மணி முதல் அமலுக்கு வந்தது.
டாடா, ஆதித்ய பிர்லா சன் லைஃப், ஜெரோதா, குரோவ், ஹெச்எஸ்பிசி, டிஎஸ்பி, இன்வெஸ்கோ, நிப்பான் இந்தியா, குவாண்டம், மிரே அசெட், எல்ஐசி, யூடிஐ ஆகிய நிறுவனங்களும் தடையை அறிவித்துள்ளன.
தன்தேரஸ், தீபாவளியை முன்னிட்டு தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் காலத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்ஃபி தரவுகளின்படி, தங்க இடிஎஃப்களில் செப்டம்பரில் ரூ.4,450 கோடி நிகர முதலீடு வந்துள்ளது; ஆகஸ்டில் இது ரூ.2,597 கோடியாக இருந்தது.
பங்குச் சந்தைச் சரிவுகள், கடன் சந்தை நிச்சயமின்மையிலிருந்து பாதுகாப்புத் தேடும் முதலீடுகள் இவை என இன்கிரெட் மணி நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி நிதின் அகர்வால் தெரிவித்திருந்தார்.