அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்தது. முந்தைய நாளைவிட 10 காசுகள் அதிகரித்து, வர்த்தக முடிவில் 94.89 ரூபாயாக நிலைபெற்றது.
உடனடி அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலருக்கான தேவையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள், ரூபாயின் மதிப்பு உயர்வுக்கு ஆதரவாக அமைந்தன என்று அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணிச் சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 94.75-ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. வர்த்தகத்தின்போது அதிகபட்சமாக 94.71 ரூபாயையும், குறைந்தபட்சமாக 95.06 ரூபாயையும் தொட்டது. வியாழக்கிழமை ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து, 94.99-ஆக முடிவடைந்திருந்தது.
அக்டோபர் 8-ம் தேதி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாற்றிலேயே குறைந்த நிறைவு நிலையான 96.88 ஆக இருந்தது. அதிலிருந்து கடந்த 6 வர்த்தக அமர்வுகளில் ரூபாய் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமாக வலுப்பெற்றுள்ளது.
ரூபாயின் சரிவைத் தொடர்ந்து, உடனடிசந்தையில் டாலர் தேவையைக் குறைக்கவும், அதிகப்படியான ஊக வணிக நிலையைக் கட்டுப்படுத்தவும் அக்டோபர் 10-ம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது. ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு, 0.41 சதவீதம் குறைந்து 101.445 ஆக வர்த்தகமானது.
ரிசர்வ் வங்கியின் தலையீடுகளின் செயல் திறனும், அமெரிக்கக் கடன்பத்திர வருவாய் நகர்வுகளும், வெளிநாட்டு முதலீட்டு வரவுகளின் வேகமும் ரூபாயின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.