கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம் ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை ரூ.53,000 கோடிக்கு வாங்கவுள்ள நிலையில், வங்கியின் பங்கு விலை நேற்று 7.5 சதவீதம் சரிந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் ஐடிபிஐ வங்கி பங்கு 7.54 சதவீதம் சரிந்து ரூ.83.62 ஆகவும், தேசிய பங்குச்சந்தையில் 7.48 சதவீதம் சரிந்து ரூ.83.62 ஆகவும் வர்த்தகமானது. புதன்கிழமை ஒப்பந்த அறிவிப்புக்கு முன்னதாக இப்பங்கு 9 சதவீதம் உயர்ந்திருந்தது. இதனால் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.8,086 கோடி அதிகரித்தது.
கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரேம் வத்சா தலைமையிலான ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனம், ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது. இதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய அரசின் 30.48 சதவீத பங்குகள் ரூ.26,620 கோடிக்கும், எல்ஐசியின் 30.24 சதவீத பங்குகள் ரூ.26,440 கோடிக்கும் வாங்கப்படுகின்றன. ஒரு பங்குக்கு ரூ.81 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சுயாதீன மதிப்பீட்டு நிறுவனங்கள் நிர்ணயித்த ரூ.75.99 மதிப்பைவிட அதிகமாகும்.
இந்திய வங்கித் துறையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது. கடந்த 2022-ல் தொடங்கிய ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கல் நடவடிக்கையில் இது முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
முன்னதாக, முதல்கட்ட ஏலத் தொகை அரசின் குறைந்தபட்ச விலையைவிடக் குறைவாக இருந்ததால் விற்பனை நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டது.
இருப்பினும், இந்தப் பரிவர்த்தனை நிறைவடைய ரிசர்வ் வங்கி, இந்திய போட்டி ஆணையம் மற்றும் பிற சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.