வாடிக்கையாளர் அனுபவச் சேவைகளை வழங்கும் ஃப்யூஷன் சிஎக்ஸ் நிறுவனப் பங்குகள், நேற்று தேசிய பங்குச் சந்தையில் வெளியீட்டு விலையைவிட 5.54 சதவீதம் அதிகமாக ரூ.305க்கு பட்டியலிடப்பட்டன.
நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு விலை பங்கு ஒன்றுக்கு ரூ.289 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்குகள் 1.04 சதவீத உயர்வுடன் ரூ.292க்கு வர்த்தகத்தைத் தொடங்கின.
ரூ.702 கோடி மதிப்பிலான இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு மொத்தம் 4.45 மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தன. சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 5.70 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்களுக்கான பகுதி 4.50 மடங்கும் விண்ணப்பிக்கப்பட்டது.
வெளியீட்டில் ரூ.500 கோடிக்குப் புதிய பங்குகளும், ரூ.202 கோடிக்கு ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களின் பங்குகளும் இடம்பெற்றன. புதிய பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதியை கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், துணை நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் நிறுவனம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 51 பங்குகளுக்கு ரூ.14,739 முதலீட்டில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்யூஷன் சிஎக்ஸ், தொலைபேசி, மின்னஞ்சல், உரையாடல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகப் பன்மொழி வாடிக்கையாளர் சேவைகளை வழங்குகிறது. அதன் ஓமைண்ட் துணை நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் பணியாளர் மேலாண்மைக் கருவிகளையும் உருவாக்குகிறது.