மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறையில் செயல்படும் டிரான்ஸ்ரெயில் லைட்டிங் நிறுவனம், ரூ.408 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன.
புதிய ஒப்பந்தங்களில், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் எரிவாயுக் காப்புத் தொழில்நுட்பத்துடன் துணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் முக்கியமானதாகும். இதற்கான பொறியியல் வடிவமைப்பு, கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. மேலும், இந்தியாவிலும் சில ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.இதன்மூலம், நடப்பு நிதியாண்டில் இதுவரை நிறுவனம் பெற்றுள்ள ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.2,429 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.1,394 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளதாக நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ரண்தீப் நரங் தெரிவித்தார்.
உலகளவில் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்புக்கான செலவினங்கள் அதிகரித்து வருவதால் புதிய வாய்ப்புகள் கிடைப்பதாக அவர் கூறினார். வெளிநாட்டில் கிடைத்துள்ள துணை மின் நிலையத் திட்டம், நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளில் சமநிலையான வளர்ச்சியை அடைவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. புதிய ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புக்குப் பின்னர், பங்கு விலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 5.48 சதவீதம் உயர்ந்து ரூ.485.95 வரை சென்றது. முந்தைய வர்த்தக நாளில் இப்பங்கின் முடிவு விலை ரூ.460.70 ஆக இருந்தது.