அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் குழுமத்தின் ஐடிஎல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம், மேற்கு வங்கத்தின் அசன்சோல் அருகே ஆண்டுக்கு 9,000 டன் உற்பத்தித் திறன்கொண்ட வெடிபொருள் ஆலையை நேற்று செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
போல்குண்டாவில் 8.4 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலையை, அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பத்தம் கருணாகர் ரெட்டி திறந்துவைத்தார்.ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிலக்கரிச் சுரங்கங்களுக்கும், பிராந்திய வாடிக்கையாளர்களுக்கும் தேவையான வெடிபொருட்களை இந்த ஆலை வழங்கும்.
பயன்படுத்தப்படும் இடத்திலேயே வெடிபொருட்களைக் கலக்கும் முறைக்கு இந்த வசதி உதவும். இதன்மூலம் தயார்நிலை வெடிபொருட்களைக் கொண்டுசெல்லும் தேவை குறைந்து, பாதுகாப்பு மேம்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல் இந்தியாவின் துணை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நீண்டகால ஒப்பந்தங்களை நிறைவேற்றவும், உரிய நேரத்தில் விநியோகிக்கவும் புதிய ஆலை உதவும். வாடிக்கையாளர்களுக்கு அருகிலேயே உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் விநியோகச் செயல்திறனை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கம், ஐடிஎல் நிறுவனத்தின் நாடு தழுவிய வெடிபொருள் உற்பத்தி மற்றும் சேமிப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.