இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புகளை விவசாயிகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், மத்திய அரசு மாநில அளவிலான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், அடிமட்ட அளவில் உள்ள விவசாயிகள், குறு, சிறு வணிகர்கள், தொழில்முனைவோரான பெண்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
பெருநிறுவனங்கள் மட்டுமே பெரும்பாலும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சர்வதேச வர்த்தகத்தின் பொருளாதாரப் பலன்கள் சாதாரண மக்களையும், கிராமப்புற தொழில்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக, மத்திய வர்த்தக அமைச்சகம் மாநில அரசுகளுடன் இணைந்து நேரடியாக இந்த வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த உள்ளது. இதன் மூலம் உலகளாவிய சந்தைகளில் உள்ள புதிய வாய்ப்புகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் மற்றும் சுங்கவரிச் சலுகைகள் குறித்த தெளிவு உள்ளூர் வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.
இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில் "இந்தியாவின் வர்த்தக கூட்டாண்மைகளை அடித்தட்டு மக்களுக்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளாக மாற்றுவதே தற்போதைய முக்கிய இலக்கு" என்றார். இந்த கூட்டு முயற்சியின் மூலம், எதிர்காலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளின் சர்வதேச அளவிலான ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.