பான்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ் மற்றும் டோன்போ இமேஜிங் இந்தியா நிறுவனங்கள், ஆரம்பப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முன்னதாக பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.1,014.62 கோடி திரட்டியுள்ளன. இரு நிறுவனங்களின் ஐபிஓவும் அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி நிறைவடைகிறது.
இத்தாலியைச் சேர்ந்த பான்ஃபிக்லியோலி குழுமத்தின் இந்திய நிறுவனமான பான்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ், பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.759.26 கோடி திரட்டியுள்ளது. மொத்தம் 1.30 கோடி பங்குகள், தலா ரூ.586 விலையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ், அபுதாபி முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களும், எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் உள்ளிட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
இந்நிறுவனத்தின் ரூ.2,534 கோடி ஐபிஓவுக்கான பங்கு விலை ரூ.558 முதல் ரூ.586 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவதும் ஏற்கெனவே உள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டப்படுவதால், நிறுவனத்துக்கு நேரடியாகத் தொகை கிடைக்காது.
இதேபோல், பாதுகாப்புத் துறை மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் டோன்போ இமேஜிங் இந்தியா நிறுவனம், பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.255.36 கோடி திரட்டியுள்ளது. தலா ரூ.700 விலையில் 36.48 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் ரூ.852 கோடி ஐபிஓவில் பங்கு விலை ரூ.665 முதல் ரூ.700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
டோன்போ இமேஜிங் நிறுவனம் கண்காணிப்பு சாதனங்கள், வெப்பப் படக்கருவிகள், ஏவுகணை வழிகாட்டும் அமைப்புகளைத் தயாரிக்கிறது. பான்ஃபிக்லியோலி நிறுவனம் தொழிற்சாலை இயந்திரங்களுக்கான கியர்பாக்ஸ் மற்றும் இயக்க அமைப்புகளைத் தயாரிக்கிறது.
இரு நிறுவனங்களின் ஐபிஓவும் முழுவதும் பங்கு விற்பனை அடிப்படையிலானது. பான்ஃபிக்லியோலி பங்குகள் அக்டோபர் 23-ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.