போன்ஃபிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு வரும் 15-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி நிறைவடைகிறது. பங்கு ஒன்றின் விலை வரம்பு ரூ.558 முதல் ரூ.586 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 25 பங்குகளுக்கும், அதன்பின்னர் 25 பங்குகளின் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம். முதன்மை முதலீட்டாளர்களுக்கான ஏல நாள் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. ரூ.10 முகமதிப்புள்ள பங்கின் குறைந்தபட்ச விலை முகமதிப்பைவிட 55.8 மடங்காகவும், அதிகபட்ச விலை 58.6 மடங்காகவும் உள்ளது.
இந்த வெளியீட்டில், ஏற்கெனவே உள்ள பங்குதாரர்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்கின்றனர். நிறுவனத்தின் புரமோட்டரான இத்தாலியின் போன்ஃபிக்லியோலி எஸ்.பி.ஏ., அதிகபட்சம் 4,32,39,042 பங்குகளை விற்பனை செய்யவுள்ளது.
இயந்திர மற்றும் மின் இயந்திர ஆற்றல் பரிமாற்றம், தொழில்துறை இயக்கத் தீர்வுகள் துறையில் செயல்படும் நிறுவனம், கியர் மோட்டார்கள், கியர் பாக்ஸ்கள் மற்றும் இயக்க அமைப்புகளைத் தயாரிக்கிறது. பல்வேறு தொழில்துறைகளுக்குத் தேவையான துல்லியமான தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனம், இந்தியாவின் பெரிய தொழில்நுட்பம் சார்ந்த வழங்குநர்களில் ஒன்றாக உள்ளது.
போன்ஃபிக்லியோலி பிராண்டுக்கு உலகளவில் சுமார் 70 ஆண்டுகளும், இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டு அனுபவமும் உள்ளது.
பங்குகள் பிஎஸ்இ, என்எஸ்இ சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. ஆக்சிஸ் கேபிடல், பிஎன்பி பாரிபா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜெஃப்ரீஸ் இந்தியா ஆகியவை வெளியீட்டின் முன்னணி மேலாளர்களாக உள்ளன.