எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை இணைக்கும் யோசனை நல்லது என்று எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர் ஆலோசனைக் கூட்டத்தில் மஸ்க் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். பங்குதாரர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் சுயாதீன இயக்குநர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்களை அமைத்து, இணைப்புக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.செயற்கை நுண்ணறிவு மென்பொருள், செமி கண்டக்டர் சிப் வடிவமைப்பு, ரோபோட்டிக்ஸ், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, விண்வெளியில் தரவு மையங்களை அமைத்தல் உள்ளிட்ட துறைகளில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
எனினும், இணைப்புக்கான நிபந்தனைகள் குறித்து இரு குழுக்களும் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை. இரு நிறுவனங்களிலும் மஸ்க் முக்கியப் பங்குதாரராக இருப்பதால், நலன் முரண்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இணைப்பு தொடர்பான குழு விவாதங்களில் தாம் பங்கேற்க முடியாது என்றும், இணைப்பு உறுதியாகும் என்றும் கூற முடியாது என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு நடைமுறைக்கு வந்தால், இரு நிறுவனங்களின் சந்தை மதிப்புகளையும் சேர்த்து சுமார் 3.5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், இதற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் அவசியம். குறிப்பாக, டெஸ்லா பங்குதாரர்களில் 50 சதவீதத்தினரின் ஆதரவு தேவைப்படும்.
இதற்கிடையே, இணைப்பு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் சுமார் 8 சதவீதமும், டெஸ்லா பங்குகள் 1.8 சதவீதமும் உயர்ந்தன.