செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸில் இருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவரும் நோக்கில் ஜப்பான் அனுப்பிய எம்.எம்.எக்ஸ். விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2031-ம் ஆண்டில் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செவ்வாயின் துணைக்கோள்கள் எவ்வாறு உருவாகின என்பதை அறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.:
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, நேற்று (அக்.20) அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து எச்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலத்தை ஏவியது. ஏவப்பட்ட சுமார் 71 நிமிடங்களுக்குப் பிறகு விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது.
சுமார் ஓராண்டுப் பயணத்துக்குப் பிறகு, 2027-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், செவ்வாய் கிரகத்தின் நிலவு என்று கருதப்படும், அதன் இரண்டு துணைக்கோள்களான போபோஸ், டெய்மோஸ் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
போபோஸின் மேற்பரப்பில் தரையிறங்கி, குறைந்தது 10 கிராம் மண் மற்றும் பாறைத் துகள்களைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகத் துளையிடும் கருவியும், வாயுவின் உதவியுடன் மண் துகள்களைச் சேகரிக்கும் கருவியும் பயன்படுத்தப்படும்.
போபோஸ் செவ்வாயுடன் மோதிய விண்பொருளின் சிதைவுகளால் உருவானதா அல்லது ஈர்ப்பு விசையால் சிக்கிய சிறுகோளா என்பதை அறிய இந்த மாதிரிகள் உதவும். சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்தும் இந்த ஆய்வு புதிய தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.